*ரசமே மருந்து*

ரசம் - முன்னோர் வைத்தியம்
ரசம் என்ற வார்த்தைக்கு சுவை என்று அர்த்தம். அப்படி சுவை மிக்கதாக மட்டுமின்றி, ஆரோக்கியம் நல்கும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ரசம் என்பது உடல் சரியில்லாதபோது பயன்படுத்தக்கூடியது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 
 
*மூலிகைகளின் கலவையாக இருக்கும் ரசத்தின் முக்கியத்துவம்*  

அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ளும் ஆகாரத்தில் அவசியம் ரசம் என்ற திரவ உணவை எடுத்துக் கொண்டால், உடல் சரியில்லாத நிலை என்ற ஒன்றே வராது. உடல் ஆரோக்கியமும் மேம்படும். உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதுபோல ரசம் இல்லா உணவு வீண் என்றே சொல்லலாம். 

*ரசம் பற்றி ஆயுர்வேதம் சொல்வதென்ன...* 

*உணவாகும் மருந்தின் அளவு* 

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதுதான் நமது உயரிய கோட்பாடு. சில உணவுகளை மருந்தாக எடுப்பதற்கு அதன் அளவை மாற்றி பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பூண்டு, இஞ்சி, மிளகாய் போன்றவற்றைக் கூறலாம். 

சில மருந்துகளை உணவாக உட்கொள்ளும் போது அதனுடன் சேரும் கலவையைப் பொறுத்து அதன் அளவுகள் மாறுபடும். உதாரணமாக தூதுவளை, முடக்கத்தான், கல்யாண முருங்கை, முசுமுசுக்கை போன்றவைகளை கூறலாம். 

ஆனால், உணவும் மருந்தும் ஒரு சேர அமைந்தவை மிகச்சில மட்டுமே. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் ரசம். 

*அறுசுவை உணவு* 

ஆயுர்வேதம் மனிதனை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற அறுசுவை கலந்த உணவை எடுத்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்துகிறது. இதனால் நமக்கு மிகச்சிறந்த ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் மனநிலையும் சீராக இருக்கும். 

அறுசுவையை தவிர்த்து ஒரு சுவையை மட்டும் அதிகமாக பயன்படுத்தினால் எந்த சுவையை அதிகமாக பயன்படுத்துகிறோமோ அதன் தன்மையைப் பொறுத்து உடல் உபாதைகளும், எண்ணங்களில் மாற்றமும் ஏற்படும். ஆக ஆரோக்கிய வாழ்விற்கு அறுசுவை ஆகாரம் அவசியம். அப்படி அறுசுவை ஆகாரம் என்று சொல்கிறபோது அதில் ரசத்தின் பங்கு அளப்பரியது. 

*உணவில் அறிவியல்* 

தமிழர்களின் கலாச்சாரத்தில் உள்ள உணவு முறை ஒவ்வொன்றுக்கும் அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல நமது உணவு பரிமாறும் முறைகளிலும் மிகப் பெரிய அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. 

இலையில் முதலில் இனிப்பு வைத்து தொடங்குகிறோம். அதைத் தொடர்ந்து சாதத்தில் பருப்பு, நெய், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம் வழக்கம். 

இதனை மாற்றி புளிக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என்றோ, மோர், ரசம், சாம்பார், புளிக்குழம்பு என்றோ ரசம், புளிக்குழம்பு, சாம்பார், மோர் என்றோ மாற்றி பயன்படுத்த முடியாது. அவ்வாறு முயற்சி செய்தாலும் கிடைக்கப் போவது என்னமோ அஜீரணம்தான். 

*உணவு உண்ணும் முறை* 

உணவை எப்படி தயாரிக்க வேண்டும், அதை தயாரிக்கும் இடம், அடுப்பு, நெருப்பு போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஆயுர்வேதம், Dining Etiquette என்று சொல்கின்ற உணவை எப்படி இங்கிதங்களோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளது. அவ்வாறு விளக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றுதான் முதலில் சிறிதளவு இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. 

இதன்மூலம் நொதி கிரந்திகள் தூண்டப்பட்டு உணவு ஜீரணிக்க அதிகளவு நொதிகள் சுரக்கும். பின்பு எண்ணெய்ப்பசை கொண்ட உணவை சாப்பிட வேண்டும். அதாவது பருப்பு, நெய்யை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இதன்மூலம் உணவு கூழ் நன்றாக உருவாக வழிவகை ஏற்படுகிறது. அதன் பின்பு புளிப்பு, உப்பு சுவை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதன் மூலம் உண்ட உணவு நன்றாக  ஜீரணமடையும். இந்த உணவு முறை நாம் உட்கொண்ட உணவு கடினமானதாக இருந்தாலும் ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ரசத்தை சொல்லலாம். இதற்கு பின்புதான் கார்ப்பு, துவர்ப்பு சுவையுடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

நமது உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கே உணவு உண்கிறோம். அதற்கு அந்த உணவு முழுவதும் நன்கு ஜீரணமடைந்து அதனால் கிடைக்கும் சக்தி முழுவதையும் உடல் கிரகிக்க வேண்டும். இப்படி அந்த உணவு ஜீரணமடைய ரசம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அஜீரணம் இருக்கும் போது ரசத்தைப் பிரதானமாகக் கொண்டு உணவு உண்டு வந்தால் மிக விரைவில் குணம் பெறலாம். 

*ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களும் அதன் மருத்துவப் பயன்களும்* 

புளிக்கரைசல், வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்றவையே ரசத்தில் சேர்க்கப்படும் பிரதான பொருட்களாக இருக்கிறது. 

இவை அனைத்தும் ஜீரண சுரப்பிக்கான நொதியை சுரக்கச் செய்து, உணவை ஜீரணிக்கச் செய்து, உடலுக்குத் தேவையான சக்தியை கிரகிக்கச் செய்கிறது. அதோடு மட்டுமில்லாமல் குடலில் மாசுகள் சேராமல் தடுப்பதோடு, மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல், வலி, கிருமி போன்ற தொந்தரவுகள் ஏற்படாமலும் தடுக்கிறது. 

ரசத்தில் சேர்க்கப்படும் மேற்கண்ட கலவையில் ஏதேனும் ஒரு பொருள் அதிகமாக பயன்படுத்தப்பட்டால், அதன் பெயரிலேயே அந்த ரசம் அழைக்கப்படுகிறது. அதனை பொறுத்து அந்த ரசத்தின் செயல்பாடும் மாறுகிறது. உதாரணமாக வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தினால் அதற்கு வெங்காய ரசம் என்று பெயர். 




Comments

Popular Posts