மூலிகை டீ 4 பலன்கள் தயாரிக்கும் விதம்

*ஒரு கோப்பை தேநீர் தரும் ஆரோக்கியம் ஏராளம் - 4 - !!!* 

*கற்பூரவல்லி டீ* 

*தேவையானவை* : தேயிலை – ஒரு டீஸ்பூன், கற்பூரவல்லி இலைப்பொடி – கால் டீஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன். 

*செய்முறை* : தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பரிமாறவும். 

*பலன்கள்* : வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஒமேகா 3, நார்ச்சத்து, மக்னீசியம், மாங்கனீஸ் நிறைந்துள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், இதய நோயாளிகள் அருந்தலாம். செரிமான மண்டலத்தை சீராக்கி, சிறுநீரகப் பாதைத் தொற்றைக் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். 

*மல்லிகைப் பூ டீ* 

*தேவையானவை* : கிரீன் டீ, பனங்கற்கண்டு – தலா ஒரு டீஸ்பூன், மல்லிகைப் பூ – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : மல்லிகைப் பூவை இரண்டு மணி நேரம் நீரில் போட்டு மூடி எடுத்தால், மல்லிகைப்பூ வாசனையுடன் நீர் ரெடி. இதைக் கொதிக்க வைத்து, கிரீன் டீத்தூள் சேர்க்க வேண்டும். பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவும். 

*பலன்கள்* : சாலிசிலிக் அமிலம், அல்கலாய்டு நிறைந்துள்ளன. சிறந்த ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிடிப்ரெஸன்டாகச் செயல்படும். மனஅழுத்தம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் வரும். சிறுநீரக அழற்சியைத் தடுக்கும். மூளையைத் தூண்டி செரட்டோனின் உற்பத்தியைச் சீராக்கும். ஆண்மையைப் பெருக்கும். 

*ஓமவல்லி டீ* 

*தேவையானவை* : ஓமவல்லி இலைகள் – 5, மிளகு – 5, கிரீன் டீ – ஒரு டீஸ்பூன், பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : கிரீன் டீயுடன் ஓமவல்லி இலைகள், மிளகு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். 

*பலன்கள்* : ஓமவல்லியில் டெர்பினாய்ட்ஸ் (Terpenoids), தைமால் (Thymol) நிறைந்துள்ளன. சளி, மூலத்தை குணமாக்கும். செரிமான பிரச்னைகளைத் தடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். ஆஸ்துமாவை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் மீது செயல்பட்டு, நுரையீரலைக் காக்கும். 

*தூதுவளை டீ* 

*தேவையானவை* : தூதுவளைப் பூ, காய், இலை சேர்த்து உலர்த்திப் பொடி செய்தது – 2 டீஸ்பூன், மிளகு – 5, பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : இரண்டு டம்ளர் நீரில் தூதுவளைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இதனுடன், மிளகு சேர்த்து,  மிதமான நெருப்பில் கொதிக்கவிடவும். பிறகு, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கிப் பருகவும். 

*பலன்கள்* : கால்சியம், பாஸ்பரஸ், ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளன. நுண்கிருமிகளை அழிக்கும். சளி, இருமலைப் போக்கும். உடலை வலுவாக்கும். ஆண்மையைப் பெருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். நுரையீரலை வலுவாக்கும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். 

*பன்னீர் ரோஸ் டீ* 

*தேவையானவை* : கிரீன் டீ – ஒரு டீஸ்பூன், பன்னீர் ரோஜா – 2 பூ, தேன் – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : இரண்டு டம்ளர் நீரில் பன்னீர் ரோஜா இதழ்களை உதிர்த்துப் போட்டு மூடி வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, அந்த நீரை எடுத்து, அதில் கிரீன் டீ சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும். 

*பலன்கள்* : வைட்டமின் பி3, சி, இ, ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளன. சருமப் பிரச்னைகள் நீங்கும். கல்லீரல், பித்தப்பையைத் தூய்மையாக்கும். சுவாச மண்டலத்தைப் பாதுகாக்கும். தொண்டைப்புண்ணைக் குணமாக்கும். 

*ரோஸ் டீ (இரண்டாம் வகை)* 

*தேவையானவை* : ரோஜா – 2 பூ, கருப்பட்டி அல்லது வெல்லம் – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : தண்ணீர் கொதிக்கும் போது அதில் ரோஜா இதழ்களைப் போட்டு, இனிப்புக்காக கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் ரோஸ் டீ தயார். தேவைப்பட்டால் டீத்தூள் சேர்த்தும் கொதிக்க வைக்கலாம். 

*பலன்கள்* : மலச்சிக்கலைப் போக்குவதற்கும், வயிற்று உப்புசத்தைத் தடுப்பதற்கும் இந்த ரோஸ் டீ பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளவும் ரோஸ் டீ நல்ல சாய்ஸ். 

*வல்லாரை நீர்* 

*தேவையானவை* : வல்லாரை இலைகள் – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : இரண்டு டம்ளர் நீரில் வல்லாரை இலைகள், சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும், வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : பொட்டாசியம், சோடியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இரத்தத்தை சுத்திகரிக்கும். மூளை செல்களைத் தூண்டி சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். முடி கொட்டுவது கட்டுப்படும். 

*கருப்பட்டி காபி* 

*தேவையானவை* : காபித்தூள் – 2 டீஸ்பூன், கருப்பட்டி – கால் கப். 

*செய்முறை* : கருப்பட்டியைக் கரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். காபித்தூளைக் கொதிக்கும் நீரில் போட்டு, டிகாக்‌ஷன் இறங்கியபின் வடிகட்டி, கருப்பட்டி சேர்த்துச் சூடாகப் பருகவும். 

*பலன்கள்* : பொட்டாசியம், சோடியம், கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு வலுவூட்டும். எலும்புகள், பற்களுக்கு நல்லது. 

*காஷ்மீரி காவா டீ* 

*தேவையானவை* : கீரீன் டீ – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – சிறிய துண்டு, பாதாம் பருப்பு பொடித்தது, குங்குமப்பூ – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு. 

*செய்முறை* : மூன்று கப் நீரைக் கொதிக்கவிட்டு, அதில், கிரீன் டீ, ஏலக்காய், பொடித்த பட்டை சேர்த்து, பாதியாகச் சுண்டியதும் குங்குமப்பூவைச் சேர்க்க வேண்டும். வடிகட்டிய பின் உப்பு சேர்த்துக் கலக்கி, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், இதில் வெண்ணெய் சேர்த்தும் பரிமாறலாம். 

*பலன்கள்* : வைட்டமின் பி2, ரிபோஃபிளேவின், கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். ஒற்றைத் தலைவலியைப் போக்கும். சருமத்தைப் பாதுகாத்து, பொலிவான தோற்றத்தைத் தரும். உள் உறுப்புகளை ஆரோக்கியமாக்கும். 

*ஹெர்பல் டீ* 

*தேவையானவை* : 
கிராம்பு, ஏலக்காய் – தலா 2, தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி  – தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் – 5 கிராம். 

*செய்முறை* : இரும்புச் சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு எடுத்து, இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும்.
ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு தட்டுப் போட்டு மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம். 

*பலன்கள்* : தும்மல், இருமலைக் குறைக்கும். கபத்தைப் போக்கும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்தத் தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும். 

*Black Tea* 

*தேவையானவை* : டீதூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன். 

*செய்முறை* : டீதூளை கொதிக்கும் நீரில் போட்டு, டிகாக்‌ஷன் இறங்கியபின் எலுமிச்சைச்சாறு கலந்து அருந்த வேண்டும். 

*பலன்கள்* : டயட்டைப் பின்பற்றுகிறவர்களின் ஃபேவரைட்டாக எப்போதும் இருப்பது பால் கலக்காத ப்ளாக் டீ. இந்த ப்ளாக் டீயை குடித்துவந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன் உடலுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும். தொடர்ந்து ப்ளாக் டீ சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் குறைவு என்கிறது ஆய்வு ஒன்று.

Comments

Popular Posts