துளசிதேநீர், அருகம்புல்டீ

*ஒரு கோப்பை தேநீர் தரும் ஆரோக்கியம் ஏராளம் - 1 - !!!* 

கோடை, மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் அல்லது ஒரு கப் காபி அருந்தினால் தான் பலருக்குப் பொழுதே விடியும். விருந்தினர் வந்தால்கூட காபி கொடுத்து உபசரிப்பது தான் நம் பண்பாடு. 

உண்மையில், டீ, காபி சாப்பிடும் பழக்கம் நமக்குக் கடந்த தலைமுறையில்தான் ஏற்பட்டது என்றால் நம்ப முடியுமா? வீட்டிலேயே எளியமுறையில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டீ, காபிகளைத் தயாரித்துக் காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். அதன் பலன்களைச் சொல்கிறார் சித்தமருத்துவர் ரமேஷ். 

*துளசி தேநீர்* 

*தேவையானவை* : துளசி இலைகள் – 10 – 20, ஏலக்காய் – 4, சுக்கு – அரை அங்குலத்துண்டு, தேன் – 2 டீஸ்பூன், பால் – கால் கப். 

*செய்முறை* : துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி விருப்பப்பட்டால் பால், தேன் கலந்து பருகலாம். 

*பலன்கள்* : துளசியில் வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், மாங்கனீஸ், மக்னீஷியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. நெஞ்சுச்சளி நீங்கும், கபத்தை அறுக்கும், தலைவலியைப் போக்கி உற்சாகத்தை அதிகரிக்கும்.  

*துளசி தேநீர் - எளியமுறை* 

துளசி இலையை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேநீராகக் குடித்தால் சளி, இருமல், சுவாசப் பிரச்னைகள் போன்றவை அகலும். சுவாசப்பாதையில் உள்ள தொற்றுகளான வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளும் இதனால் எளிதில் அகலும். 

*பெரிய நெல்லி தேநீர் (முதல் வகை)* 

*தேவையானவை* : பெரிய நெல்லி – 3, மஞ்சள்பொடி – ஒரு சிட்டிகை, மிளகு – 5, தேன் – தேவைப்பட்டால் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : நெல்லிக்காயை விதை நீக்கி, நன்கு தட்டிக்கொள்ள வேண்டும். மிளகைப் பொடிக்கவும். இரண்டு டம்ளர் நீரில் இவற்றுடன் மஞ்சளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். ஒரு டம்ளராக வற்றியதும், எலுமிச்சைச்சாறு சேர்த்து, விருப்பப்பட்டால் தேன் சேர்த்துப் பருகவும். 

*பலன்கள்* : நெல்லியில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைவாக உள்ளன. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகையைப் போக்கும். மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. உட்புறப் புண்களைக் குணப்படுத்தும். சளி, இருமல் நீங்கும். தோல் நோய்கள் கட்டுப்படும். 

*பெரிய நெல்லி டீ (இரண்டாம் வகை)* 

*தேவையானவை* : பெரிய நெல்லி – 3, கொத்தமல்லித்தழை – கால் கப், மிளகு – 10, தேன் அல்லது பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : பெரிய நெல்லியின் விதைகளை நீக்கி, கொத்தமல்லி, மிளகைச் சேர்த்து அரைத்து இரண்டு டம்ளர் நீருடன் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : நெல்லியுடன் கொத்தமல்லி சேர்வதால், வைட்டமின் ஏ, சி உடன் வைட்டமின் கே-வும் கிடைக்கிறது. கொத்தமல்லி செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பார்வைத்திறன் மேம்படும். இரத்த சோகையைப் போக்கும். 

*முருங்கைப்பூ காபி* 

*தேவையானவை* : முருங்கைப்பூப் பொடி – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு டம்ளர், பனங்கற்கண்டுப் பொடி – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : முருங்கைப் பூவைச் சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்ய வேண்டும். காய்ச்சிய பாலில், இந்தப் பொடியும் பனங்கற்கண்டும் சேர்த்துக் கலக்கி அருந்தலாம். 

*பலன்கள்* : முருங்கையில் வைட்டமின் ஏ, பி6, பி9, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இரத்தசோகையைப் போக்கும், உடலுக்கு வலுவைத் தரும். எலும்புகளை வலுவாக்கும்.  உடல்வலியைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும். 

*பேரீச்சம் விதை காபி* 

*தேவையானவை* : பேரீச்சை விதைப்பொடி – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு டம்ளர், பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்யவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம். 

*பலன்கள்* : பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இரத்தசோகையைப் போக்கும். இரத்த உற்பத்திக்கு, தாது உற்பத்திக்கு உதவும். சருமத்தைப் பாதுகாக்கும். நினைவாற்றாலை மேம்படுத்தும். 

*சீரக நீர்* 

*தேவையானவை* : சீரகம் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 3, கிராம்பு – 1, தேன் – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : சீரகம், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை அரைத்துப் பொடி செய்ய வேண்டும். ஒரு டம்ளர் வெந்நீரில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி, தேன் கலந்துப் பருக வேண்டும். 

*பலன்கள்* : வைட்டமின்கள் ஏ,பி,சி,டி,இ,கே, பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்துள்ளன. சீரகம், செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றுப்புண்ணைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். உட்புற உறுப்புகளைக் குளுமையாக்கும். இரத்தத்தைச் சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 

*அருகம்புல் நீர்* 

*தேவையானவை* : அருகம்புல் – ஒரு கைப்பிடி. 

*செய்முறை* : அருகம்புல்லைச் சுத்தம் செய்து, அரைத்துச் சாறு எடுக்கவும். சாற்றை, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து பருகலாம். 

*பலன்கள்* : அருகம்புல்லில் இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இரத்தத்தைச் சுத்திகரித்து தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும். மாதவிடாய் பிரச்னைகள் சீராகும். புற்றுநோயைத் தடுக்கும். 

*இஞ்சி டீ* 

*தேவையானவை* : இஞ்சி – 2 அங்குலத் துண்டு, எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பால் – கால் கப், பனஞ்சர்க்கரை – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : இஞ்சியைத் தோல் சீவிச் சுத்தம்செய்யவும். ஏலக்காயைத் தட்டி இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துக் கலந்து அருந்தலாம். தினசரி காலையில் பருக ஏற்றது. பாலுக்கு பதில் எலுமிச்சைசாறு கலந்து பருகலாம். 

*பலன்கள்* : கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், பாலிஃபினால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும், நெஞ்சு எரிச்சல், வயிற்று உபாதைகளைப் போக்கும். புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Comments

Popular Posts