சுக்கு காப்பி

*ஒரு கோப்பை தேநீர் தரும் ஆரோக்கியம் ஏராளம் - 2 - !!!* 

 *இஞ்சி டீ (வேறொரு முறை)* 

*தேவையானவை* : இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு, கிரீன் டீ – ஒன்றரை டீஸ்பூன், தேன் அல்லது பனங்கற்கண்டு – சிறிதளவு, பால் – கால் டம்ளர். 

*செய்முறை* : இஞ்சியை நன்கு தட்டி, ஒரு டம்ளர் நீரில் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். கொதி வரும்போது தேயிலை சேர்க்கவும். சாறு இறங்கியதும், வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். 

*பலன்கள்* : கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், பாலிஃபினால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறுகள், வயிற்று உபாதைகளைப் போக்கும். புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிரீன் டீ கொழுப்பைக் கரைத்து, இதயத்தை வலுவாக்கும். 

*சுக்கு காபி* 

*தேவையானவை* : சுக்கு – ஒரு அங்குலத்துண்டு, ஏலக்காய் – 2, பனஞ்சர்க்கரை – 2 டீஸ்பூன், பால் – அரை கப். 

*செய்முறை* : சுக்கு, ஏலக்காயைச் சேர்த்துப் பொடிக்க வேண்டும். இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இதை மாலையில் பருகிவரலாம். 

*பலன்கள்* : கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். சளி, கபம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். 

*கொத்தமல்லி டீ* 

*தேவையானவை* : கொத்தமல்லி விதை – 100 கிராம், ஏலக்காய் – 2, பனஞ்சர்க்கரை – 2 டீஸ்பூன், பால் – அரை டம்ளர். 

*செய்முறை* : தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடிக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் எடுத்து, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகவும். 

*பலன்கள்* : மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கே நிறைந்துள்ளன. இரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். செரிமானத்திறனைச் சீராக்கும். வயிற்றுப்புண்ணைப் போக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பார்வைத்திறனை மேம்படுத்தும். 

*கொத்தமல்லி இலை தேநீர் - எளியமுறை* 

கொத்தமல்லித் தழையை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து அத்துடன் சுக்குத்தூள், வெல்லம் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல், அஜீரணம், மூட்டுவலி, வாய் கசப்பு போன்றவை ஓடிப் போகும். முக்கியமாக, இரவில் இந்த கொத்தமல்லி தேநீரைக் குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். 

*செம்பருத்திப் பூ காபி* 

*தேவையானவை* : செம்பருத்திப் பூ – 1, ஏலக்காய், கிராம்பு – தலா 2, மிளகு – 5, பால் – அரை கப், பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப் பூவை எடுத்து, காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிட வேண்டும். இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்து சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். 

*பலன்கள்* : செம்பருத்தியில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் உள்ளன. இவை, இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பலப்படுத்தும். சருமத்தைப் பாதுகாக்கும். 

*செம்பருத்தி பூ டீ* 

நான்கு செம்பருத்தி பூக்களின் இதழ்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து சுவைக்கு வெல்லம் சேர்த்தால் செம்பருத்தி டீ.

*பயன்கள்* : இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவையும், சர்க்கரை அளவையும் குறைக்கும் இந்த செம்பருத்தி டீ. 

*தாமரைப்பூ காபி* 

*தேவையானவை* : வெண்தாமரை அல்லது செந்தாமரை – ஒன்று, மிளகு – 5, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பால் – கால் டம்ளர், பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப் பூவைப் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். கொதி வரும்போது மிளகு, ஏலக்காய், கிராம்புப் பொடி சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவு வந்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். 

*பலன்கள்* : அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. புற்றுநோய் வராமல் தடுக்கும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும். கர்ப்பப்பையை வலுவாக்கும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது. 

*புதினா டீ* 

*தேவையானவை* : புதினா இலை – 5, தேயிலை – ஒரு டீஸ்பூன், தேன் அல்லது பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன், பால் – கால் டம்ளர் (விருப்பப்பட்டால்). 

*செய்முறை* : ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். 

*பலன்கள்* : புதினாவில் மென்தால் நிறைந்துள்ளது. இது சுவாசமண்டலப் பிரச்னைகளைச் சரிசெய்யும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும், இதில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால் உட்புறப் புண்களைக் குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும். 

*புதினா இலை டீ - எளியமுறை* 

புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சம்சாறு, வெல்லம் சேர்த்துப் பருகினால் செரிமானக் கோளாறு, வாயு பிரச்னை அகலும். உடலின் தசைகள் தளர்வடைவதால் நிம்மதியான தூக்கமும் வரும். 

*கிரீன் டீ – எலுமிச்சை சேர்த்தது* 

*தேவையானவை* : கிரீன் டீ – அரை டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : இரண்டு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் கிரீன் டீத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : வைட்டமின்கள் சி, இ, பாலிஃபினால்கள், ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளன. மூளை புத்துணர்ச்சி பெறும். தேவையற்ற கொழுப்பு கரையும். டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். அல்சைமர் எனும் மறதி நோயைக் கட்டுப்படுத்தும். நினைவுத்திறனை மேம்படுத்தும். இதயத்தை வலுவாக்கும். 

*கிரீன் டீ - எளியமுறை* 

எடை குறைப்பு என்றவுடனே ஞாபகம் வரும் பெருமை கொண்டது க்ரீன் டீ. காலை வேளையில் க்ரீன் டீயைத் தொடர்ந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். இத்துடன் புற்றுநோய் மற்றும் இதயநோயைத் தடுக்கும் வல்லமையும் க்ரீன் டீக்கு உண்டு.

Comments

Popular Posts